Wednesday, October 13, 2010

புதுக்கோட்டை அறி(ந்த)முகம் புதுக்கோட்டை சமஸ்தானம் 1947 ஆகஸ்ட்டு 15 வரை பிரிட்டீஷ் ஆளுகைக்கு  உட்படாத தனி நாடு.தனி ஆட்சி, தனி சட்டம், தனி நாணயம்  ( இந்தியக்   காசை எப்படி ரூபாய் என்கின்றோமோ அதுபோல புதுகை காசின் பெயர் அம்மன் காசு) என்று தனிக்காட்டு இராஜாவாக இருந்தவர்கள் நாங்கள். இன்றைக்கும் புதுகையில் யாரேனும் என்னிடம் கையில் ஒரு பைசாக்கூட இல்லை என்பதனைக் குறிப்பிடும் முகமாக "கையில் அம்மஞ் சல்லிகூட இல்லை" என்ற பதத்தை வழக்கில் புழங்குவதைப் பரவலாகக் காணலாம்.

தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டைத் தனியரசு(சமஸ்தானம்) 3.3.1948ல் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

வரலாற்றுக்கு முற்பட்டக் காலம்

ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன. 
ஆண்டவர்கள் :


பாண்டியப் பேரரசு

கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை தமிழகப் பகுதி கலப்பிரரின் ஆளுகையின் கீழ் இருந்தது.  பிறகு பாண்டிய பேரரசு (3-880)வரை ஆட்சி செய்தார்கள்.

       
பல்லவர்

 இதற்கு இடைப்பட்ட காலங்களில் பல்லவ பேரரசும் அவ்வபோது ஆண்டு வந்திருகிறது

முத்தரையர்

தமிழகத்து வரலாற்றுக் கதாப்பாத்திரங்களில் முத்திரையர் குறிப்பிடத்தக்கவர். புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவர் ஆட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் இவர்களே.

 தமிழகத்தின் தொன்மைக் கலைக்கு புத்துயிரூட்டிய இவர்களது புகழுக்கு புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள முத்தரையர் காலத்து கோயில்களும் கலைச் சின்னங்களும் முத்தாய்ப்பாய் விளங்குகின்றன.

முற்காலத்தில் பெருநிலக் கிழார்களாக வாழ்ந்துவந்த முத்தரையர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தஞ்சாவூர்,திருச்சி புதுக்கோட்டை பகுதிகளில் பல்லவ மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர்.

 முத்தரையரின் தோற்றுவாய் பற்றி அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. முத்தரையர் கலப்பிரர்களின் கிளைக்குடியினர் என்று டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் களப்பிரர் என்ற சொல்லில் இருந்து முத்தரையர் என்ற சொல் எப்படிவந்தது என்று தெரியவில்லை.

தமிழகத்தின் கலை, கலாச்சாரம், சமய சடங்குகள், பண்பாடு அனைத்தையும் நிலைகுலையச் செய்த களப்பிரரையும் கலக் காவலர்களாக காட்சியளிக்கும் முத்தரையரையும் தொடர்பு படுத்த முடியாது. முத்தரையர் என்பவர் பல்லவரே என வேங்கடசாமி நாட்டாரும், கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று ராகவ அய்யங்காரும் கூறுகின்றனர்.

 முத்தரையர் ஆரம்ப காலத்தில் பாண்டி நாட்டு முத்துக்குளிக்கும் துறைமுகப் பகுதிகளில் ஆட்சி செய்திருக்க வேண்டும். முத்து + அரையர் = முத்தரையர்(அரையர் என்றால் நாடாள்வோர் என்று பொருள்.

முத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியனின்பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது.

 மேற்கண்ட கருத்துக்களை கூர்ந்து ஆராயும் பொழுது முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினராக இருந்திருக்க வ்ஏண்டும். இவர்கள் கொடும்பாளூர் வேளிருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினர் ஆயினும், இவர்கள் பல்லவர் ஆட்சிக்கு பக்கபலமாக இருந்து பாண்டியரை எதிர்த்துப் போரிட்டிருக்கின்றனர. 

இதற்கு அப்புறம் துவங்கியது தொண்டைமான் அரசர்களின் ஆதிக்கம். சுதந்திர இந்தியாவோடு புதுகை இணையும் வரை ஆண்ட வம்சம் தொண்டைமான் வம்சம்.

புதுக்கோட்டை சமஸ்தானம் இராச்சியம் (1800 வரை இராமநாத ஜமீனுக்குள்),
இந்தியாவிற்குள் (1800–1947)0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment