Friday, July 1, 2011

திருவரங்குளம் அதிசயங்கள்

              புதுக்கோட்டை மாவட்ட அதிசயங்கள் என்றால் பெரும்பாலும் வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றாகத்தான் இருக்கும்.

            இந்த பதிவிலும் அதையே பின்தொடர்ந்து ஆலங்குடி
 அருகேயுள்ள திருவரங்குளம் என்ற கிராமத்தின் வரலாற்று
 பின்னணியையும் , அங்கு உள்ள அதிசயங்களையும் பதிய உள்ளேன்.

இதோ திருவரங்குளம் ஊரின் வரலாறும் , பெயர்காரணமும்.....


                                         

மண்ணுக்கு அடியில் 3000 பொற்பனம்பழம்:


           திருவரங்குளம் ஒரு காலத்தில் காடாக இருந்தது. அந்தக் காட்டில் வேடன் ஓருவன் தன் மனைவியுடன் வசித்து வந்தான். ஒருமுறை உணவு தேடச் சென்ற அந்த வேடுவச்சியைக் காணவில்லை. நீண்டதூரம் சென்றும் உணவு கிடைக்காத அவள், திரும்பி வரும் வழியை அறிய முடியாமல் தவித்தாள்.

        அவளை ஒரு முனிவர் கண்டார். பத்திரமாக அவளை வேடனிடம் ஒப்படைத்தார். அவர்களது வறுமை நிலையைக் கண்ட அவர் ஒரு பனைமரத்தை அவர்கள் அறியாமலே படைத்து விட்டு சென்று விட்டார்.

        அந்த மரத்திலிருந்து தினமும் ஒரு பொற்பனம்பழம் கீழே விழுந்தது. இதை எடுத்த வேடன், ஊருக்குள் வந்து ஒரு வணிகரிடம் கொடுப்பான். அதன் உண்மை மதிப்பை அறியாத அவனிடம், வணிகர் ஏதோ சிறிதளவு பொருளை மட்டும் கொடுப்பார். அதைக் கொண்டு உணவு சமைத்து அவன் காலத்தை ஓட்டி வந்தான்.

         இப்படியே 4420 பழங்களை விற்று விட்டான். வணிகரோ பெரும் பணக்காரராகி விட்டார். வணிகரின் அபரிமிதமான வளர்ச்சி கண்ட வேடனுக்கு சந்தேகம் ஏற்பட்டு சிலரிடம் விசாரிக்க, பல்லாயிரம் பணம் மதிப்புள்ள பொற்பனம்பழங்களை, வெறும் உணவுக்கு விற்றது கண்டு வருந்தினான். வணிகரிடம் தனக்குரிய பங்கைக் கேட்டான். அவர் மறுத்து விட்டார்.

       வேடன் மன்னரிடம் புகார் செய்தான். பொற்பனை பற்றி கேள்விப்பட்ட மன்னன் தன் ஏவலர்களை அனுப்பி அம்மரத்தை பார்த்து வர ஆணையிட்டான். அங்கோ மரமே இல்லை. அதற்கு பதிலாக ஒரு லிங்கம் காணப் பட்டது.

       இவ்விடத்தில் ஒரு கோயில் கட்ட தீர் மானித்தான். இதைக் கேள்விப் பட்ட வணிகரும், இறைவனால் இப்பொருள் வேடனுக்கு அருளப் பட்டது என்பதையறிந்து அவனிடமிருந்து பெற்ற பொற்பனம் பழங்களில் 1420 ஐ விற்று ஒரு கோயில் எழுப்பினார். மீதி 3000 பழங்களை கோயில் அறை ஒன்றில் பூட்டி வைத்தார்.

அப்பழங்கள் இவ்வூரிலேயே புதைந்து கிடக்கும் என இவ்வூர் மக்கள் இப்போதும் நம்புகின்றனர்.

                                                     
இக் கோயிலில் மூலவர் அரங்குளநாதர் எனப்படுகிறார்.. மூலவரின் பெயரை கொண்டு ஊரின் பெயர் வந்திருக்கலாம் என்பது எனது கருத்து.
                                                     

இவ்வூரைச் சேர்ந்த  பெண்மணியே தெய்வமான கதை :

        இவ்வூரைச் சேர்ந்த பெண்மணியான பெரியநாயகி என்பவர் இறைவன் மீது அதீத அன்பு பூண்டிருந்தார். ஒருமுறை தன் பெற்றோருடன் கோயிலுக்கு வந்தார். சற்றுநேரத்தில் மறைந்து விட்டார். பின்பு அசரீரி தோன்றி, அப்பெண்மணி சிவனுடன் ஐக்கியமாகி விட்ட தகவலை தெரிவித்தது.

       நகரத்தார் சமுதாயத்தினர் அவரை அம்மனாகக் கருதி, "பிரகதாம்பாள்' என பெயர் சூட்டி தனி சன்னதி எழுப்பினர். இது காலத்தால் பிற்பட்ட சன்னதி என்பது பார்த்தாலே புரியவரும்.
                                                     
சிறப்பு வாய்ந்த நடராஜர் சிலை :

           இக்கோயில் நடராஜர் சிலை சிறப்பு வாய்ந்த ஒன்று.  இதன் படிமம் டில்லியிலுள்ள தேசிய மியூசியத்தில் உள்ளது. சுவாமி அரங்குளநாதர் சுயம்புவாக அருள் தருகிறார். பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட ராஜகோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும்.
                                                

         இங்குள்ள திருச்சிற்றம்பலம் உடையாரை தரிசித்தால் காசி விஸ்வநாதரை தரிசித்த பலன் கிடைக்கும். 12 ராசிகளும் அதற்குரிய அதிதேவதைகளுடன் மூலிகை ஓவியமாக வசந்த மண்டபத்தின் உச்சியில் வரையப்பட்டுள்ளது.

பிரகாரத்திலுள்ள தெட்சிணாமூர்த்தியின் கையில் வீணை இருக்கிறது. பிரகாரத்தை நூற்றுக்கால் மண்டபம் என்கிறார்கள். ஒரு குதிரை வீரனின் சிற்பம் கல்பலகை ஒன்றில் வடிக்கப்பட்டுள்ளது.  இது இப்பகுதியில் வாழ்ந்த வீரனாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
                                                     

     தியானம் செய்ய விரும்புவோர் இங்குள்ள அமைதியான சூழலை மிகவும் விரும்புவர். குரங்குகள் அதிகமாக உள்ளன. இவற்றின் சேஷ்டைகளை குழந்தைகள் ரசிப்பார்கள்.

இந்த திருத்தலமானது 500-1000 வருடங்களுக்கு முந்தையது  என்பது ஆச்சர்யம் தரும் செய்தியாகும் .

(from temple.dinamalar)

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment