Tuesday, June 14, 2011

குடுமியான்மலை அதிசயங்கள்

குடுமியான்மலை - புதுக்கோட்டைக்கு பெருமை சேர்க்கும் மற்றும் ஒரு அதிசயம், சிற்ப கலையின் மணி மகுடம் என்றே சொல்லலாம்.

   குடுமியான்மலை புதுக்கோட்டையிலிருந்து 16 கி.மீ தொலைவில்
உள்ள ஒரு அழகான மற்றும் பல அதிசயங்களை கொண்ட கலை நயம் கொண்ட ஊர் என்றால் மிகை அல்ல.
                                           
இங்குள்ள கோயில் மூலவரின் பெயர் சிகாநாதசாமி. இந்த ஊருக்கான பெயர்காரணமும் இவரையே சார்ந்துள்ளது . அதற்க்கான வரலாறு
 இதோ உங்களுக்கு,
     " முன்னொரு காலத்தில் இக்கோயில் அர்ச்சகர் ஒருவர் பூஜைக்கு வைத்திருந்த பூவை எடுத்து அங்குவந்த தனது ஆசைநாயகிக்கு கொடுத்துவிட்டார்.
       அந்தச் சந்தர்ப்பத்தில் மன்னர் கோயிலுக்கு வந்துவிட, மன்னரைக் கண்டதும் செய்வதறியாது தவித்த அர்ச்சகர் தனது ஆசைநாயகியின் தலையிலிருந்த பூவை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்தி, அதைப் பிரசாதமாக மன்னருக்கு அளிக்க அதில் தலைமுடி ஒட்டியிருந்ததைக் கண்ட மன்னர் அதன் காரணத்தை அர்ச்சகரிடம் வினவினார்.
      அர்ச்சகர் சமயோதிதமாக கோயிலில் குடி கொண்டிருக்கும் மூலவருக்கு குடுமியுள்ளது என்று சொல்லிவிட்டார். வியப்பு மேலிட்ட மன்னர் இறைவனின் குடுமியைக் காட்டும்படி கேட்க, தனது பக்தனான அர்ச்சகரைக் காப்பாற்ற இறைவனும் லிங்கத்தில் குடுமியுடன் காட்சியளித்தார். "

         இதுதான் மூலவரின் பெயருக்கும் , ஊரின் பெயருக்கும் உள்ள பெயர்காரணம். சற்றே விளக்கமாக ,
            "கோயில் மூலவரின் பெயரான சிகாநாதசாமி என்பதைக் கொண்டு குடுமியான் மலை என்று அழைக்கப்படுகிறது."
               "சிகா என்பது குடுமி என்னும் பொருளில் குடுமியுள்ள இறைவன்
என்று வரும்"
                                                        
     மேலும் , இக்கோயிலில் குடுகொண்டுள்ள லிங்கத்திற்கு குடுமியிருப்பதைக் குறிக்கும் வண்ணம் லிங்கத்தின் குடுமி - முடிச்சு போன்ற பகுதி இருப்பதை பக்தர்களுக்கு காட்டப்படுகிறது.

அக்காலத்தில் திருநலக்குன்றம் என்னும் இவ்வூர் குன்றைச் சுற்றிலும் வீடுகள் அமைந்திருந்தன. குன்றின் மீது ஏறிச் செல்லும் போது ஒரு இயற்கைக் குகையினைக் காண்கிறோம். இது கற்கால மனிதர்களின் இருப்பிடமாக இருந்திருக்கலாம். குன்றின் உச்சியில் குன்றுதோரோடும் குமரன்கோயில் உள்ளது. குன்றின் கிழக்குச் சரிவில் சிகாநாதசாமி கோயில் உள்ளது.

 புதுக்கோட்டைப் பகுதியின் வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த பல அறிய செய்திகளை குடுமியான்மலையிலுள்ள கல்வெட்டுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இங்குள்ள மேலக்கோயில் என்னும் குகைக்கோயிலும் அதன் அருகிலுள்ள கர்நாடக சங்கீதம் பற்றிய கல்வெட்டு ஒன்று உள்ளது.
                                                       
 பல்லவராயர்கள் இக்கோயிலின் பராமரிப்பிற்கு கொடைகள் அளித்த செய்தியை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பல்லவராயர்களைத் தொடர்ந்து தொண்டைமான்களின் ஆட்சியில் இக்கோயில் சிறப்புடன் விளங்கியது. காலத்தால் முற்பட்ட தொண்டைமான் மன்னர்கள் இந்தக் கோயிலிலேயே முடிசூட்டிக் கொண்டார்கள். ரகுநாதராயத் தொண்டைமான்(1686 - 1730) குகைக் கோயிலின் முன் உள்ள மண்டபத்தைக் கட்டியிருக்கிறார். 1730ல் ராஜா விஜயரகுநாத ராயத் தொண்டைமான் இக்கோயிலிலேயே முடிசூட்டிக் கொண்டார். அம்மன் கோயிலிலுள்ள 1872ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று ராமச்சந்திர தொண்டைமான் காலத்தில் இக்கோயிலின் திருக்குடமுழுக்குத் திருவிழா நடைபெற்ற செய்தியைத் தெரிவிக்கிறது
                                        
இம்மண்டபத்தின் முகப்புத் தூண்களில் அனுமன், வாலி, சுக்ரீவன் போன்ற சிற்பங்கள் உள்ளன.  மேலும், ஆனைவெட்டு மண்டபத்தில் மிகவும் கலைநயம் வாய்ந்த சிற்பங்களை காண முடியும்.
        "உயிரோட்டமுள்ள நரசிம்ம அவதாரக் காட்சியினை நரசிம்மரின் சிற்பத்தை ஒரு தூணில் காணலாம் "
                                     
       "உலகத்து அழகையெல்லாம் தன்வயப்படுத்திக் கொண்டு காட்சியளிக்கும் மோகினி(மோகினி உருவில் விஷ்ணு)"
      "வினை தீர்க்கும் விநாயகர்,பத்துத் தலையுடன் கூடிய இராவணன்,அகோர வீரபத்திரர் என பல சிற்பங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன"
                           
நாயக்கர் மண்டபத்தில் காணப்படும் வியாகரபாதர்(மனித உருவம் புலியின் கால்கள்) பதஞ்சலி(மனித உடலும் பாம்பு கால்கள் போன்றும்) சிற்பங்கள் காணத்தக்கவையாகும்.
                                        
ரகுநாதராயத் தொண்டைமான் குகைக்கோயிலுக்கு முன்னால் ஒரு மண்டபத்தைக் கட்ட உயரமான இந்த மண்டபத்திற்கு விஜரகுநாதராய தொண்டைமான் 1730 - 1769 படிக்கட்டுகள் அமைத்தார் என்றும் செய்திகள் அறியப்படுகிறது.
                   
            
     இவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

அடுத்த அதிசயத்தில் மீண்டும் சந்திப்போம்...
( from Poetry in stone and kailaibala, mohandas blog)    

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment