Wednesday, October 20, 2010

சித்தன்னவாசல் அதிசயங்கள்








சித்தன்னவாசல்  புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். அந்த மாவட்டத்தின் தொல்லியல் பாரம்பரியம் மிக்க இடங்களில் புகழ்பெற்றதும் இந்த இடம்தான்.
இங்கே அழியும் தருவாயில் உள்ள பழங்கால ஓவியம், அந்த ஓவியம் அமைந்துள்ள குகைக்கோயில், அதன் பிறகு சில பல சமணர் படுக்கைகள், மிகப் பழமையான கல்வெட்டுக்கள் என்று அனைத்தும் ஓரிடத்தில் காணக்கிடைக்கின்றன. இவை அனைத்தும் நமது பாரம்பரியத்திற்கு சமணர்களின் பங்களிப்பாகும். அவை மட்டுமின்றி, ஏகப்பட்ட முதுமக்கள் தாழிகள் இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பொதுவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சமணர்கள் பலகாலம் தங்கி இருந்ததற்கான சான்றுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன. சில சில ஊர்களின் கூட இடிந்து போய் அடிவாரம் வரை மிச்சமமுள்ள சமணர் கோயில்களையும், அனாதையாக கைவிடப்பட்டுள்ள சமணர் சிலைகளும் கிடைத்துள்ளன.
தமிழக தொல்லியல் துறையின் சமணர் பட்டியலில் புதுக்கோட்டை மிக முக்கியத்துவம் பெறுகிறது. அப்படிக் கைவிடப்பட்டுள்ள சில சமணர் சிலைகள் சில இடங்களில் வழிபாட்டிலும் உள்ளன. மொட்டைப் பிள்ளையார், சடையர் என்று மக்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப பெயர் சூட்டி, செவ்வந்திப்பூ மாலை, சாம்பிராணி, குழாயில் மாரியம்மன் பாடல் என்று சில புண்ணியம் பெற்ற சமணர் சிலைகள் வழிபாட்டில் உள்ளன.


இந்த இடம் ஒரு குன்று. கிட்டத்தட்ட 200 அடி உயரம் உடையது. சாலையிலிருந்து போனதும் செங்குத்தான அந்த மலையில் ஓரத்திலிருந்து படிக்கட்டுகள் தொடங்குகின்றன. ஒரு புறம் ஏறி மறுபுறம் அடைந்தால் முதலில் வருவது சமணர் படுக்கைகள்.

அவற்றை விடுத்து கீழே இறங்கி அடுத்த அரை கிலோமீட்டர் போனால் குகைக்கோயிலும் அதனுள் வரையப்பட்டிரு்ககும் அழகிய ஓவியமும் உள்ளன.
அந்த குன்றைச் சுற்றி பல்வேறு இடங்களில் முதுமக்கள் தாழிகளைப் பார்க்கலாம்.  கிமு 2 அல்லது 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கிபி 10 ஆம் நூற்றாண்டு வரை சித்தன்னவாசலில் சமணம் தழைத்தோங்கி உள்ளது. கிபி 7 அல்லது 9ஆம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்ற ஓவியம் வரையப்பட்டுள்ள அறிவர் கோயில் குடையப்பெற்றுள்ளது.


இங்கே சமணர் படுக்கைகள் மற்றும் எழுத்துருக்கள் உள்ள ஏழடிப்பட்டம்
குகைக் கோயிலும் ஓவியமும் உள்ள அறிவர் கோயில் மலை உச்சியில் ஒரு சுனை, நவ்வாச்சுனை என்று ஒரு பாதி நாளுக்கு வரலாற்றுசு் சுற்றுலா கொண்டாட ஏதுவான வசதிகள் அனைத்தும் உண்டு.இந்த இடத்தை ஏழடிப்பட்டம் என்று கூறுகிறார்கள்.


முன்னரே சொன்னது போல, ஒரு மலையில் செங்குத்தாக கடந்து மறுபக்கம் இறங்கவேண்டி உள்ளது. இருக்கும் ஒரு அடி இடத்தில் நமக்காக பாதை அமைந்துத் தந்துள்ளது தொல்லியல் துறை. கொஞ்சம் பலமாகக் காற்றடித்தால், இதயம் உடலை விட்டு வெளியில் வந்து துடிக்கும், அந்த அளவுக்கு செங்குத்தான சரிவு மறுபுறம். எழு காலடித்தடங்களைச் செதுக்கி அதன் மூலமாக முனிவர்கள் இந்த இடத்தை வந்த போயிருக்கிறார்கள். அதனாலேயே இந்த அழகான பெயரைச் சூட்டியிருக்கின்றனர்.

இந்த ஏழடிப்பட்டம் என்பது இயற்கையாகவே மலையில் அமைந்த ஒரு குகை. மலையில் மடிப்பு மாதிரியான ஒரு அமைப்பு. காதில் கூச்சலிடும் காற்று, தனிமை, அமைதி, பக்கத்தில் உதவிக்கு என்று அழைக்க யாருமே இல்லாத ஒரு புதர் காடு என்று இந்த இடம் துறவிகளுக்காகவே அமைக்கப்பட்டிருக்கும் போல.


கயாவின் லோமாஸ் ரிஷி, புவனேஸ்வரத்தின் உதயகிரி குகைகள், தமிழ்நாட்டின் ஆனைமலை, அழகர்மலை போன்றவையும் இத்தன்மையதே. புதுக்கோட்டையிலேயே, குடுமியாமலை, நார்த்தாமலையில் இத்தகைய குகைகள் உண்டு. மலை இருந்தால் குகை இருப்பது சகஜம்தானே!

இங்கேதான் சமண துறவிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தங்கி சமய சேவைகள் செய்து, நோண்பிருந்து தம் நல்லுயிர் ஈந்திரு்கின்றனர். இந்த குகை ஒரு அறை போன்று தோற்றம் உடையது. தொலலியல் துறைக்கே உண்டான வவ்வால் நாற்றமும் உண்டு. இங்கே 17 படுக்கைகள் அமைந்துள்ளன, கல் தலையணையோடு! அதில் ஒன்று மட்டும் பெரியது, அனேகமாக அதுவே பழையது.




 இதைப் பற்றி குறிப்பிட காரணம் உண்டு. அனேகமாக இந்த படுக்கையைச் சுற்றித்தான் தென்னிந்தியாவின் மிகப் பழமையான எழுத்துவடிவம் கல்வெட்டாய் நமக்குக் கிடைக்கிறது. தமிழ் மொழியை அசோக பிராமியில் பதித்துள்ளார்கள். இதன் காலம் கிமு 2 அல்லது 3ஆம் நூற்றாண்டு. கிட்டத்தட்ட 2010 வருடங்களுக்கு முந்தியது!!




படத்தைச் சுற்றி எழுதியிருப்பது கல்வெட்டின் வடிவம். எருமிநாட்டில் உள்ள குமிழூரில் பிறந்த காவுடி (துறவியோட பெயர்)க்காக, தென்கு சிறுபோசில் ஊரைச் சேர்ந்த இளையர் செய்தளித்த படுக்கை என்பதே அதில் கூறப்படம் செய்தி. செய்தியில் விசேசமில்லை, அது செய்யப்பட்ட காலத்தில்தான் சிறப்பு உள்ளது.
 
 பெரும்பாலும் அனைத்துப் படுக்கைகளும் கல்வெட்டுக்களைக் கொண்டுள்ளன. பொதுவாக யாருக்காக யார் செய்து கொடுத்த படுக்கை என்ற அதில் எழுதப்பட்டிருக்கும். சில படுக்கைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கல்வெட்டுக்களும் உண்டு. ஒரே படுக்கையை பலரும் பயன்படுத்தி இரு்ககலாம் அல்லவா.
 ஓவியங்கள் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த குகைக்கோயில்தான் அறிவர் கோயில். சாலையிலிருந்து ஒரு நூறு அடி தூரத்தில் உள்ளது இந்த கோயில். இதன் உள்ளே சமண ஆச்சாரியர்களின் சிலைகளும், விதானத்தில் ஓவியங்களும் காண்பபடுகின்றன

 கர்ப்ப கிரகத்தின் சிற்பங்கள்,சித்தன்னவாசல் ஓவியங்கள், கிமு 2- கிபி 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தா, 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கை சிகிரியா, 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாக் குகை ஓவியங்கள் (மத்தியபிரதேசம்) இவற்றுடன் காலத்திலும், வரையும் முறையிலும், தரத்திலும் ஒப்பிடத்தக்கது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, சித்தன்னவாசல் மட்டுமே முற்கால சமண ஓவியங்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

 சமவஸரணம் என்ற சமண சமய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டுள்ள விதான ஓவியங்கள் நிஜமாகவே அழகான மற்றும் நேர்த்தியானவை. மேலே கொடுக்கப்பட்டுள்ள ஓவியங்களில் கோட்டோவியங்களாகக் கொடுக்கப்பட்டுள்ள நடன மாதர்களின் படங்கள் அழிந்துவிட்டன.
 நவ்வா மரத்தூர்களில் ஒளிந்திருக்கும் நவ்வாச்சுனை, இந்த சுனையின் உள்ளே ஒரு குகைக்கோயில் உள்ளது. சிவனுக்கானது.இதுமாதிரியான கல் வட்டங்களை நிறைய பார்க்கலாம். பழங்கால மக்களைப் புதைத்த இடங்கள் இவை. இங்கிருந்து எடுக்கப்பட்ட தாழிகளில் ஆயுதங்கள் போன்றவையும் இருந்திருக்கின்றன.
 போக்குவரத்து

புதுக்கோட்டை - மணப்பாறை சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீட்டர்கள். பேருந்து வசதிகள் உண்டு. உத்தேசமாக அரை மணிக்கு ஒன்று.
கவனத்தில் கொள்ளவேண்டியவை.  சித்தன்னவாசல் ஓவியங்களை காலத்தின் அடிப்படையிலேயே அதன் முக்கியத்துவத்தைப் பார்க்கவேண்டும்.

 அஜந்தா குகை ஓவியங்களைப் போன்று பல ஓவியங்களைப் பார்க்க இயலாது. இருப்பது சிறிய குகைக்கோயில்தான். அதுவும் ஒனறுதான்.
இருக்கும் ஓவியங்களும் அழிந்து வருகின்றன. இருப்பவையும் பக்கத்தில் நடைபெற்றுவரும் கல்குவாரிகளால் நாளுக்கு நாள் உதிர்கின்றன. சமண சமயத்திற்கு என்று நமக்கு இருக்கும் ஒரே இடம் இதுதான்.
அம்மதத்தைச் சேர்ந்த அல்லது சேராத அமைப்புகளோ தனி மனிதர்களோ, சற்று கவனம் எடுத்து சித்தன்னவாசலைக் காப்பாற்றினால் மட்டுமே நமது சந்ததியினருக்கு சித்தன்னவாசல் ஓவியத்தைக் காட்டலாம்.


வெற்றிடமே!அதுமட்டுமில்லாமல் ஆள் அரவமற்ற இடமாக இருப்பதால், நம் ஊருக்கென உள்ள அலங்கோலங்களும் நடைபெறும். தக்க துணையுடனும் ஏற்பாடுகளுடனும் செல்லுதல் உகந்தது.

2 comments:

  1. நம் நாட்டின் பழங்கால புராதான சின்னமான‌ சித்தன்னவாசல் ஓவியம்

    ReplyDelete
  2. பட்டைய கிளப்பறீங்க போங்க. யாரோ எழுதியதை "Posted by அ.கோபால்" என்று போட்டுள்ளீர்கள்.

    ReplyDelete