Friday, October 22, 2010

திருமயம் அதிசயங்கள்




 



திருச்சி - புதுகோட்டை - காரைக்குடி சாலையில் புதுகோட்டையிலிருந்து தெற்கே 20கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. திருமயம்  ஒரு கிராமும் கிடையாது, நகரமும் கிடையாது. இது ஒரு சிற்றூராட்சி.
 இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் குடைவரை கோயில்கள் உண்டு. இங்கே இசை கல்வெட்டுக்கள் உண்டு. சிவன் கோயில் சற்று பழையது என்பர். வைணவர்களுக்கு இவ்வூர் சிறப்பு மிக்கது.
 இவ்வூரில் இந்திய விடுதலை வீரரும், பின்னாள் காங்கிரசில் தலைவராயும் இருந்த திரு சத்தியமூர்த்தி அவர்கள் இங்கே 1887ல் பிறந்தார்.
கிபி 630-688ல் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டப்பட்டது தான் திருமயம்.   கருவரையுடன் கூடிய குடைவரைக் கோவிலை மட்டும் தான் பல்லவர்கள் கட்டியுள்ளார்கள்.
அங்கு உள்ள சத்திய மூர்த்திப் பெருமாள் கோயில் முழுவதும் படிபடியாக பலரால் பிற்காலத்தில் சோழர்கள், முத்தரையர்கள், பாண்டியர்கள், விஜய நகர அரசர்கள், நாயக்கர்கள், சேதுபதி மன்னர்கள், நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் முதலானோர்கள் பல நிலைகளில் இக்கோயிலை கட்டியுள்ளார்கள்.

இங்கு உள்ள பெருமாள் பெரிய திருமேனியுடன் முப்பது அடிநீளத்தில் ( அரங்கநாதனை விட பெரிய திருமேனி)  காட்சியளிக்கிறார். 

 குடைவரை கோயிலில் ஐந்து தலைகளை உடைய ஆதிசேஷன் மீது சயனத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். காலடியில் பூமாதேவி, மார்பினில் திருமகள், இடமிருந்து வலமாக கருடன், தர்மராஜன், சித்திரகுப்தன், சந்திரன், சூரியன், ராகு பிரம்மா, தேவர்கள், ரிஷிகள், வலதுகோடியில் மது,கைடபன் முதலான அரக்கர்கள் என அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இவை தவிர, கானப்பறை, பேரிகை, சல்லிகை, தக்கை, தண்ணுமை தடாகமும், தடாரி, உடுக்கை, கிடக்கை, கரடிக்கை முதலான பண்டைக்கால கருவிகளும் மலையில் வடிக்கப்பட்டுள்ளன!.
கோயிலுக்கு மேல் இருக்கும் கோட்டை ஒரு சின்ன குன்றின் மேல் அமைந்துள்ளது. இந்த கோட்டை ஊமையன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. ஊமையன் வீரப்பாண்டிய கட்டபொம்மனின் தம்பி. இந்த கோட்டை ராமனாதபுரம் இரகுநாத சேதுபதியால்(1678) கட்டப்பட்டது.
பிறகு(1728) தன் மாமன் இரகுநாத ராயத் தொண்டைமானுக்கு கொடுக்கப்பட்டது. இந்த கோட்டை ஏழு பிரகாரங்களை கொண்டவை. கடைசி பிரகாரம் தற்போது குப்பை தொட்டியாக பயண்படுகிறது.
இந்த திருமயம் கோட்டையின் ஒரு புறமாக , அக்கால போர்முறைகளை கண்முன் கொண்டுவரும் சுழலை காணலாம்.

வரலாற்று புகலிடமான இந்த திருமயம் , இன்று  திரைப்படங்களின் பாடல் காட்சிக்குதான்  பயன்படுகிறது . நீங்களும் கூட பார்த்திருக்கலாம் ( போட்டுத்தாக்கு  என்ற பாடலுக்கு சிம்புவும் ரம்யா கிருஷ்ணனும் ....)

புதுமை விரும்பிகளே ... பழமை காலத்தையும் கொஞ்சம் திரும்பி பார்க்கணும்ன்ன புதுக்கோட்டைக்கு வாங்க பார்க்கலாம்..   நானும் கூட வர்றேன்..

என்றும் அன்புடன் ,
  அ .கோபால்

2 comments: